bubble

LED

fire

ilm

ILM

Thursday, October 6, 2011

கன்னத்தில் முத்தமிட்டால்


வாப்பா....... வாப்பா.............
”என்னம்மா?”
”வாப்பா... சாயங்காலம் சீக்க்ரம் வந்திருங்க, சரியா ஆறு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிச்சிருவாங்க, கலெக்டர் தான் சீப் கெஸ்ட். நான் பேச ஆரம்பிக்கையில் நீங்க இருக்கணும் சரியா........... " சொல்லிக்கொண்டே கல்லூரிப் பேருந்தைப் பிடிக்கப் பறந்தாள் ஆயிஷா.

"சரிம்மா, அம்மாவோடு வந்திடறேன் இன்ஷா அல்லாஹ்" சிரித்துக்கொண்டே பதிலுரைத்தார் வாப்பா.

"சிரிக்காதீங்க, என்ன தான் இருந்தாலும் ஒரு முஸ்லிம் பொண்ணு பேசிற தலைப்பையா தேர்ந்தெடுத்திருக்கிறாள்; முத்தமாம் முத்தம், எனக்கு வர இஷ்டமில்லை....." கோபத்துடன் சமையலறைக்குப் போனாள் அம்மா.

ஆயிஷா, மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி. கல்லூரியின் இலக்கியப் பேரவை சார்பில் நடத்தப்படும் விழாவுக்கு கலக்டர் அழைக்கப்பட்டிருக்கிறார். விழாவில் மாணவர்களின் பேச்சுப் போட்டியும், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயிஷா தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு 'முத்தம்'. அதனால் தான் இத்தனை யுத்தம்.

" இதற்காகவா ரெண்டு நாளா குறிப்பெடுத்திங்க வாப்பாவும் மகளும்..... சரியில்லைங்க....." அம்மா மீண்டும் குமுறினாள் சிற்றுண்டியை மேசையில் வைக்கும் போது.

" சரி விடு, நீ அவ கூடரெண்டு நாளா சண்டை போட்ட, அதுதான் உனக்கு சஸ்பென்ஸ்ன்னு சொல்லியிருக்காள்...... , வந்து கேட்டுப்பாரு"
"அஞ்சு மணிக்கு வர்றேன், ரெடியா இரு." சிற்றுண்டி முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினார்.

கல்லூரியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 'ஆயிஷா என்ன பேசப்போகிறாள்?'
எல்லோரும் கேட்டுக்கொண்ட கேள்வி இதுதான்.

மணி 6:15 ஆகிவிட்டது, வாப்பாவை காணவில்லையே என்ற வருத்ததோடு வாசலை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஆயிஷாவை பேச அழைத்தார் தொகுப்பாளர்.

கல்லூரி வாயிலைஅடையும் நேரம், ஆயிஷாவை தொகுப்பாளர் அழைக்கும் சப்தம் கேட்டு விரைவாக உள்ளே நுழைந்தனர் வாப்பாவும் அம்மாவும்.

மேடையில் உள்ளோரையும், வந்திருந்தவர்களையும் வரவேற்று பேசி முன்னுரையினை முடிக்கும் நேரம், பெற்றோரைப் பார்த்த சந்தோசத்தில் பேச்சைத் தொடரந்துகொண்டிருந்தாள் ஆயிஷா.
".......... முத்தத்தினால், தனக்கு கிடைக்க வேண்டிய கவர்னர் பதவியினை ஒருவர் இழந்து விட்டார், அப்படி பதவி மறுக்கப்பட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. நான் ஒன்றும் குற்றம் புரியவில்லையே, முத்தம் கொடுப்பதில்லை என்று தானே சொன்னேன், இதற்கும் என்னுடைய பதவிக்கும் என்ன தொடர்பு? அந்த மனிதருக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது. "

"அன்பர்களே, உங்களுக்கும் கூட இந்த ஐயம் எழலாம், இன்னும், இது எந்த மாநிலத்தில் நடந்தது? என்றும் கூட கேட்கத் தோன்றும். பதவி இழப்பு இன்று ஒருவேளை நடந்திருந்தால் முத்தம் கொடுத்ததற்காக வேண்டுமானால் நேர்ந்திருக்கும்."

அவையில் ஒரே சிரிப்பொலி; அம்மாவுக்கோ மகள் அரசியல் பேசுகிறாளே என்ற வியப்பு!

நண்பர்களே! விஷயத்திற்கு வருகிறேன், நான் சொன்ன அந்த நிகழ்ச்சி ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. உமர் பின் கத்தாப் (ரழி) என்ற நபித் தோழர் 'கலீபா' வாக ஆட்சி புரிந்த நேரம், அந்த மனிதர் ஆளுனராக பதவியமர்த்த அழைக்கப்பட்டிருந்தார். அந்த நேரம் கலீபாவுக்கும் ஆளுநராக பதவியேற்க வந்திருந்தவருக்கும் நடந்த உரையாடலின் இடையே, "......நானெல்லாம் என் குழந்தைகளை கொஞ்சுவதா? முத்தமிடுவதா?? அப்படி எதுவுமே செய்தது கிடையாது" என்று அது ஏதோ குற்றமான செயல் போல சொன்ன மாத்திரத்திலேயே, கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், அந்த நபருக்கு தரவிருந்த பதவியினை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்.
குழம்பிப்போய் இருந்த அந்த நபரிடம் சொன்னார்கள், "உனது மனம் உன் குழந்தைகளிடமே இரக்கம் காட்டவில்லை கருணைகாட்டவில்லையெனில், பிறகு நீர் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்துகொள்வீர்? இறைவன் மீது ஆணையாக உம்மை ஒருபோதும் ஆளுனர் ஆக்கமாட்டேன்" என்று கூறி திருப்பி அனுப்பினார்கள்.

அவை மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது, ஆயிஷா அடுத்ததாக தொடர்ந்தாள்.

முத்தத்திற்கும் கருணைக்கும் தொடர்பா? ஆம் நண்பர்களே, அண்மையில் ஒரு அறிவியல் செய்தியினைப் படிக்க நேர்ந்தது. நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சி அரவணைத்து முத்தமிட்டு மகிழ்வது நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் பாசம் காரணமாக என்று நினைத்திருக்கிறோம், ஆனால் அது அவற்றையும் மீறி இதயத்தின்பால் ஊறுகின்ற கருணையின் காரணமாக என்றறியும் போது வியப்பை அளிக்கிறது,

பெற்றோர் குழந்தையினை முத்தமிடுவத்தின் மூலம் அந்தக் குழந்தை ஓர் உணர்வு ரீதியான அரவணைப்பைப் பெறுகிறது. அதுவும் ஒரு தாய் முத்தமிடும் போது குழந்தையுடனான பாசப்பிணைப்பு உயிரியல் மூலம் உறுதிசெய்யப்படுகிறது, பெற்றோரின் இந்த ஆத்மார்த்தமான முத்தத்தினால், எந்த ஒரு எதிர்மறையான சூழ்நிலையிலும் தாழ்வுமனநிலை என்பது குழந்தையின் உள்ளத்தினைப் பாதிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,

மேலும், குழந்தையினை முத்தமிடுவதால் குழந்தைக்கும் அதேவேளையில் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையினை அடையமுடிகிறது,
குழந்தையின் இதயம் சீராக செயலாற்ற பெரிதும் உதவுகிறது.

தாய் தன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ன நடக்கிறதென்பதை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையை உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். ஒரு தாய் தன் குழந்தையினை கருவில் சுமக்கும் போது அதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கான தேவைகளை ஈடுசெய்கிறாள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு வெளி உலகில் குழந்தையினைத் தாக்கும் நோய்க்கு எதிர்சக்திகளை உருவாக்குவதில் முத்தம் பெறும் பங்கு வகிக்கிறது. ஆச்யர்யமாக இருக்கிறதல்லவா?? ஆம், ஒரு தாய் முத்தமிடுவதன் மூலம் கிருமிகளின் மாதிரி எடுக்கப்பட்டு வெளித் திசுக்கள் மற்றும், நினைவுத்திறன் 'பி' வகை செல்கள் மூலம் அந்த கிருமிகளின் வீரியம் அழிக்கப்பட்டு, இதற்கான நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாக்கப்பட்டு அவை 'பி'வகை செல்களினால் நினைவுத்திறன் கொண்டு தாய்ப்பால் மூலம் குழந்தைக்குப் போய்ச்சேருகிறது.
குழந்தையும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறது.

எனவே தான் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே, அறிவியல் அறிந்திராத காலத்தில் தோன்றிய எங்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், குழந்தைகளை முத்தமிடாத ஒரு கிராமவாசியைப் பார்த்து, "இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா??" என்று கூறினார்கள்.

"அன்பும் கருணையும் கலந்திருக்கும் முத்தத்தினைப்.........................."

வார்த்தையினை முடிப்பதிற்குள் அரங்கில் கரவொலி நிரம்பியிருந்தது.
அம்மா, ஆயிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்

-புதுசுரபி

Wednesday, October 6, 2010

நெஞ்சுக்கு நீதி



"நெஞ்சில் உங்களுக்கு ஈரம் ஊறுகின்ற காரணத்தினாலேதான் நீங்கள் எவ்வளவு கொடுமையான வியாதிகளையும் எவ்வளவு பார்க்கத்தக்க, முடியாத, இயலாத மோசமான வியாதிகளையும் நீங்கள் குணப்படுத்த ஒரு நோயாளியின் அருகே செல்கிறீர்கள் என்றால், நெஞ்சிலே இருக்கின்ற ஈரமும் அந்த ஈரத்தின் காரணமாக ஏற்படுகின்ற இதயக்கசிவும் தான் இதற்க்கெல்லாம் காரணம்.

இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து இன்று நேற்றல்ல -காலம் காலமாக மருத்துவத்துறை மாணவர்களுக்கு கற்பிக்கபடுகின்ற பயிற்சி எது என்பதை உணர்ந்து அந்த பயிற்சியையே வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு மனிதனை வாழவைக்க வேண்டும். அதற்க்காகத்தான் இந்த தொழிலை இன்றைக்கு கற்றிருக்கிறோம் ........."
(தினத்தந்தி01-03-2010)

இது தமிழக முதல்வர் 28 -02 -2010௦ அன்று சென்னை மருத்துவக்கல்லுரியின் 175வது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய மருத்துவக்கல்லுரியின் அடிக்கல் நாட்டு விழாவின் நிகழ்ச்சியில் மாணவர்களை பாராட்டியோதோடு மட்டுமல்லாமல் எப்படி மருத்துவர்களாக வெளியே வரவேண்டும் என்று கூறிய அறிவுரை தான்.

இதனை பிரசுரித்த பத்திரிக்கைகளின் மை காய்வதற்கு முன்னே முதல்வர், இன்னுமொரு கண்டிப்பான செய்தியினை - மக்களின் மனதில் அறுவருப்பினை ஏற்படுத்திய செய்தியினைப் பற்றிய செய்தியினையும் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது.

"..........................குற்றங்கள் நடைபெறும்போது அவை எப்படி நடத்தப்பட்டன, எங்கே, யாரால் நடத்தப்பட்டன, எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதை சான்றாக காட்ட, காட்டப்படும் படங்கள், செய்திகள் அளவுக்கு மீறி விடுகிறது.
அவற்றை படங்களாக பார்த்திடும் இளையோர்கள் நெஞ்ச்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதையும் அனைவரும் எண்ணிப்பார்க்கவேண்டும் .........................." என்று ,தினமலர் 05-03-2010) ஊடகத்துறையினருக்கு கண்டிப்பு குரல் கொடுத்திருக்கிறார்.
முதல்வர், இளையோர் நெஞ்சங்களையும், அவர்தம் உளப்பாதிப்பைப்பற்றியும் மேலும் நாளை உலகை ஆளப்போகும் இளைய சமுதாயத்தைப் பற்றியும் கவலை கொள்வதைப்போலவே, இன்று எல்லா மருத்துவர்களும், ஆய்வாளர்களும் - தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் தரம் பற்றியும் அதனால் ஏற்படும் உளரீதியிலான பிரச்சினைகள் பற்றியும் கட்டுரைகள் வாயிலாகவும், கருத்தரங்குகள் வாயிலாகவும் தங்கள் கருத்துக்களையும் வேதனைகளையும் வெளிப்படுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் மருத்துவர்கள், முதல்வர் சொன்ன அந்த நெஞ்சின் ஈரம் மற்றும் அதன் இதயக்கசிவின் காரணமாக.

அண்மையில் சீனப் பிரதமரின் தாய் மூளையில் இரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி நாளேடுகளில் வெளியானது அவர் அந்த நோய்க்கு எப்படி உள்ளானார் என்று மருத்துவர்கள் கூறுகையில், " தன மகன் அதாவது சீனப் பிரதமர் இங்கலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச்சென்றபோது ஒரு நபர் அவர் மீது ஷூ வை வீசி எறிந்தார், இதை தொலைகாட்சி வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த நோய்த்தக்குதலுக்கு ஆளானார் இந்த தாய்" என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

முதல்வரை கவலை கொள்ளச்செய்து கண்டிப்புடனும் இளைய சமுதாயம் மீது கொண்ட உண்மையான அக்கறையின்பாலும் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப படித்துப் பார்த்தால் அவை யாவுமே இன்று செய்திகள் என்ற பெயரில் அருவருக்கத்தக்க நிகழ்வுகளை காட்டியதற்கு மட்டுமல்ல, மாறாக இன்றைய திரைப்படங்களுக்கும், சிந்தனையினை மழுங்கடிக்கும் 'சீரியல்' களுக்கும் கூட பொருந்தும். ஏனென்றல் சின்னத்திரை இயக்குனர்கள் " நாட்டில் நடப்பதைத்தானே நாங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றோம் " என்கிறார்கள். பெரும் குற்றம் புரிந்து கைதாபவர்களோ, " எங்களை இது போல செய்யத்தூண்டியது திரைப்படக்கட்சிகளே" என்று வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

நடந்த குற்றம் எப்படி என்று செயல்முறை விளக்கங்களுடன் ஒளிவு மறைவின்றி செய்திகளாகவோ, தொடர்களகவோ, அல்லது நகைச்சுவையாகவோ ஏதோ ஒரு பெயரில் இன்று வீடுகளில் மட்டுமன்றி அலுவலகங்கள், பேருந்துநிலையங்கள், புகைவண்டிநிலையங்கள், மருத்துவமனைகள் என மனிதர்கள் கூடும் இடங்களில்லெல்லாம் தன் சேவையினை திறம்பட செய்துகொண்டிருக்கிறது தொலைக்காட்சி!

முதல்வர் சொன்னது போல் சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு ஈரத்துடன் அளப்பரிய சேவையினை செய்ய வரும் மருத்துவத்
துறையினரே! தரம் குறைந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதனால் உடல் உள்ளமும் பாதிப்படைகிறதென்று கருத்து தெரிவிக்கும் மருத்துவ உலகினரே! குறைந்தபட்சம் உங்கள் இடத்தினிலாவது அதாவது மருத் துவமனைகளிலாவது சாபக்கேடாக இன்று நம்மை அடிமைப்படுத்தி இருக்கும் மேற்சொன்ன நிகழ்ச்சிகளைத்தரும் அலைவரிசைகளை தவிர்த்து விடுதல் நலமாய் இருக்குமே. இந்த சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது என்பதிலும் நல்ல மனமாற்றங்களை ஏற்படுத்துவதிலும் ஏன் உங்கள் பங்கும் இருக்ககூடாது?

A Patient with patience என்ற மனநிலையில் வரும்போது, எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் அமைதியுடன் அமர்ந்திருக்கும் போது வழக்கமான கூச்சல், குழப்பம், ஆபாசம், பழிவாங்கல்- இவைதான் அவர்கள் முன்னே, போழுதுபோக்குவதற்க்காகவும் தன்னுடைய முறைக்காகக் காத்திருக்கும் வேளையில் சலிப்பேற்படாமல் இருப்பதற்கும் தரப்படுகின்ற மருந்தாக இருக்கிறது.

பொழுதுபோக்கிற்காக நமக்கு கிடைத்திருக்கின்ற ஒரே மருந்து -அருமருந்து இவைகள் தானே என்று எல்லோருமே நினைத்திருக்கிறோம். மாற்றாக, நேர்மறைசிந்தனைகளை தூண்டக்கூடிய, சமுதாயப்பிரச்சினைகளை சுட்டிக்காட்டக்கூடியதாக, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கின்ற தீமைகளை குறிப்பாய் மது, புகை மற்றும் புகைஇலைப்பொருட்களால் ஏற்படும் பெரும் வியாதிகளைப்பற்றியுமாக, மனிதர்களுக்கு சவாலாய் முன்நிற்கும் பூமி வெப்பமயமாதல், வட்டியின்கொடுமை, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை, அவற்றிக்கான தீர்வு மற்றும் பெற்றோர்களே போலீசாகமாறி குழந்தைகளைத் தண்டிக்கும் முறையினை மாற்ற முறையான குழந்தை வளர்ப்பு, கல்வியின் அவசியம், முதியோர் பேணல், முதலுதவி செய்முறை, வாகனம் ஓட்டும்போது செல்பேசி உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் -அவற்றிக்கான விழிப்புணர்வு என எண்ணற்ற குறும்படங்கள் சமுதாய சிந்தனை உள்ளவர்களால் நித்தம் நித்தம் தயரிக்கப்பட்டுகொண்டேதான் இருக்கின்றன. 'இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே' என்பது போல சமுதாய சௌக்கியம் உங்கள் 'இடத்திலிருந்து' தொடங்கட்டும்.

சில வேளைகளில் சில மருந்துகள் ஒவ்வாமையினால் பக்கவிளைவுகளை ஏற்ப்படுத்தும்போது மாற்று மருந்து தருவது வழக்கம் தானே! இன்று சமுதாயத்திற்கு தேவைப்படும் மாற்று மருந்து உங்கள் கைகளில் இருந்து கிடைக்கட்டும்.


-புதுசுரபி

Saturday, December 9, 2006

புதுசுரபி

அனைத்து வலை அன்பர்களுக்கும் வணக்கம்!
இந்த 'புதுசுரபி'யை சின்னத்திரையிலும் கண்டிருக்கலாம், விரைவில் சென்னை வந்து உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.
நன்றி.
-புதுசுரபி.yesrafi@gmail.com